Pages

Saturday, August 20, 2016

சுப்ரமணிய பாரதியார்

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882
பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
இறப்பு: செப்டம்பர் 11, 1921
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.  அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
இளமைப் பருவம்
சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.    .
பாரதியாரின் திருமண வாழ்க்கை
பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.
பாரதியாரின் இலக்கிய பணி
‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இறப்பு
 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.
பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்
எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.

வ. உ. சிதம்பரம் பிள்ளை

வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். அவருக்கு, புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. இதனையே ஆங்கிலத்தில், ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்று கூறுகின்றனர். ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரத்திற்காக அவஇது பங்களிப்பைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
 பிறப்பு: செப்டம்பர் 51872
பிறந்த இடம்: ஒட்டப்பிடாரம்தமிழ்நாடுஇந்தியா
இறப்பு: நவம்பர் 181936
தொழில்: வக்கீல்அரசியல்வாதி
நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு
வ. உ. சி அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 5, 1872ல் பிறந்தார்.
குழந்தை பருவமும் சட்டத்துறையும்
அவரது தந்தை உலகநாதன் பிள்ளை நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர். இதுவே, தனது கல்வி முடிந்த பிறகு, அவரைத் தனது தந்தையின் வழியில் தொடர்ந்து செல்ல ஊக்குவித்தது. அவர், தனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்திலும், அருகிலுள்ள திருநெல்வேலி பள்ளிகளிளும் சேர்ந்து கல்விப் பயின்றார். தனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, ஒட்டப்பிடாரத்திலுள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் சட்டப்பள்ளியில் சேர்ந்து, சட்ட ஆய்வுகளை நிறைவு செய்து அவரது தந்தை உலகநாதன் பிள்ளை போலவே ஒரு வழக்கறிஞரானார்.
சட்டத்தொழிலில், அவரின் மிகப் பெரிய உத்வேகமாக அவரது தந்தை இருந்தாலும், அவருக்கும், அவரது தந்தை உலகநாதன் பிள்ளை அவர்களுக்கும் செயல்படும் பாணிகளில் ஒரு அடிப்படை வேறுபாடு இருந்தது. அவரது தந்தை சமுதாயத்தில் பணக்காரர்களின் பிரச்சினைகளில் மட்டும் வாதாடுபவர். ஆனால், வ.உ.சி அவர்கள், ஏழை மக்களின் மீது கொண்ட அனுதாபத்தின் காரணமாக, பல தருணங்களில் தனது செல்வாக்குமிக்க தந்தையின் விருப்பத்திற்கு எதிராகவும் வாதாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் ‘மூன்று துணை நீதிபதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற வழக்கில்’ சிறப்பாக வாதாடிக் குற்றவாளிகளை நிரூபித்ததால், அவர் பலராலும் ஈர்க்கப்பட்டு, மிகச் சிறந்த வழக்கறிஞர் என்ற புகழ் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
செயல்மிகு அரசியலில் நுழையும் பொருட்டாக, 1905ல் வ. உ. சி அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள். இதுவே, வ.உ.சியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரவும், சென்னை மாகாணத்தின் உறுப்பினர்களுடன் இணைந்துப் போராடவும் தூண்டியது. பின்னர், அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வில் தலைமைத் தாங்கினார்.
கப்பல் நிறுவனம்
இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தவுடன்,  இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக அவர்  முழு மனதுடன் சுதேசிப் பணியில் மூழ்கினார். அவரது சுதேசி வேலையின் ஒரு பகுதியாக, இலங்கை கடலோரங்களிலுள்ள ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின் ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். சுதந்திர போராட்ட வீரர் ராமக்ருஷ்ணானந்தாவால் ஈர்க்கப்பட்ட அவர், நவம்பர் 12, 1906ல், ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை’ நிறுவினார். தனது கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க, இரண்டு நீராவி கப்பல்களான “எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்”, மற்ற சுதேசி உறுப்பினர்களான அரபிந்தோ கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் வாங்கினார். ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தைத் தாண்டியும், வ.உ.சியின் கப்பல்கள் தூத்துக்குடி-கொழும்பு இடையே வழக்கமான சேவைகளைத் தொடங்கியது. அவரது கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு இந்தியர் அமைக்கப்பட்ட முதல் விரிவான கப்பல் போக்குவரத்து சேவையாகவும் இருந்தது. ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’, பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு கடும் போட்டியாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வ.உ.சியும் தனது கப்பல் கட்டணத்தை மேலும் குறைத்தார்.
கடைசியில், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. மேலும், பயணிகளுக்கு  இலவச சவாரி மற்றும் குடைகள் வழங்கும் உத்திகளைக் கையாண்டனர், ஆங்கிலேயர்கள். ஆனால், வ.உ.சியால் அவ்வாறு முடியவில்லை. இதனால், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி திவாலாகும் விளிம்பிற்கே சென்றது.
தேசிய மனப்பான்மை
அவர், நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும், தவறான ஆங்கிலேய அரசாங்கத்தைப் பற்றி இந்திய மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருந்தார். இதன் நோக்கமாக அவர், திருநெல்வேலியிலுள்ள ‘கோரல் மில்ஸ்’ தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றார். ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்ட வெறுப்பினால், இச்செயலை அரசாங்கத்திற்கு எதிரான துரோகம் என்று குற்றம் சாட்டி, மார்ச் 12, 1908 அன்று அவரைக் கைது செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். அவரைக் கைது செய்தப் பின்னர், நாட்டில் வன்முறை வெடித்தது. இதனால், காவல் அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டு, நான்கு பேர் மரணம் அடைந்தனர். ஆங்கிலேய அதிகாரிகள், அவரது செயல்களுக்குத் தீவிரமாக கண்டனம் தெரிவித்தாலும், நாட்டின் ஊடக ஆதரவு கிடைத்ததால், அவரின் தேசிய உணர்வை அவர்கள் நாளிதழ்கள் மூலமாக விரிவாகப் பாராட்டினார்கள். ஆங்கிலேயர்கள், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முயற்சித்தாலும், நாட்டிலுள்ள இந்தியர்கள், சிறையிலிருந்து அவரை விடுவிக்க நிதி சேகரித்தனர். அச்சமயம், தென் ஆஃப்ரிக்காவிலிருந்த மகாத்மா காந்தியும், வ.உ.சியின் பாதுகாப்பிற்காக, மேலும் நிதி சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பினார். தனது கைதுக்குப் பின்னர்,  அவர் கோயம்புத்தூரிலுள்ள மத்திய சிறையில் ஜூலை 9, 1908 முதல் டிசம்பர் 1, 1910 அடைக்கப்பட்டார். அவரின் புரட்சிகரமான மனப்பான்மையைப் பார்த்து அஞ்சிய ஆங்கிலேயர்கள், தெளிவாக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தனர்.
சிறையில் இருந்த அந்நாட்களில், மற்ற அரசியல் கைதிகளுக்குக் கிடைத்த சலுகைகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவர் மற்ற குற்றவாளிகள் போல சிறையில் கடின உழைப்பில்  ஈடுபட்டார். அவரது இந்த கடின உழைப்பு, அவரின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது. இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் அவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதால், டிசம்பர் 12, 1912 அன்று அவரை விடுதலை செய்தனர். சிறையில் இருக்கும் போது,  அவர் தனது சட்ட மனுக்கள் மூலம் அவரது சுதேசி நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சிறையில் கொடுமையான சூழ்நிலை நிலவியதால், அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரின் விடுதலைக்குப் பின், சிறை வாயிலின் முன்பு பெருமளவு தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை எதிர்பார்த்த அவருக்கு அச்சம் விளைவிக்கிற அளவுக்கு அமைதி காத்திருந்தது. இது, அவருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. ‘பாரிஸ்டர் பட்டம்’ அவரிடமிருந்து பறிக்கப்பட்டதால், அவரால் சட்டப் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனமும் 1911ல் ஒழிக்கப்பட்டதால்,  அவர் ஏழ்மை நிலையை அடைந்தார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் குடியேறினார். பின்னர், சென்னையிலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளின் தலைவரானார். 1920ல், அவர், இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா அமர்வில் ஆயத்தமானார்.
இலக்கிய படைப்புகள்
அரசியல்வாதியாகவும், வழக்கறிஞராகவும் அவர் ஆற்றிய பணிகளைத் தவிர, அவர் ஒரு சிறந்த அறிஞரும் ஆவார். சிறையில் இருந்தபோது, தனது சுயசரிதையைத் தொடங்கிய அவர், 1912ல் சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற பின், அதனை நிறைவு செய்தார். அவர், ஒரு சில நாவல்களையும் எழுதியுள்ளார். அவர், தத்துவ எழுத்தாளாரான ஜேம்ஸ் ஆலன் அவர்களின் பல படைப்புகளை தமிழில் மொழிப் பெயர்த்துள்ளார். தமிழில் மிக முக்கியமான படைப்புகளான திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் தொகுப்புகளையும் வெளியுட்டுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
அவர், 1895ல் வள்ளியம்மையை மணமுடித்தார். ஆனால், அவரது மனைவி 1901ல் இறந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர்  மீனாட்சி அம்மையாரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு நான்கு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தனர். அவருடைய மூத்த மகன், தனது இளமைப் பருவத்திலேயே இறந்து விட்டார். அவரது இரண்டாவது மகன், ஒரு அரசியல்வாதி. மூன்றாவது மகன், சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றுகிறார். நான்காவது மகன், இன்னும் மதுரையில் வசித்து வருகிறார். அவரது மகள்கள் அனைவரும் சென்னையில் மணமுடித்து வசிக்கின்றனர். அவரது வம்சாவளிகள் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
இறப்பு
ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்ததால், அவரது வழக்கறிஞர் பட்டம் பறிக்கப்பட்டு, அவரை சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த பின், அவர் ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆனால், தனது கடன்களைத் திருப்பி செலுத்தாததால், அவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார். அவரது இறுதி மூச்சை, தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில், நவம்பர்  18, 1936அன்று விட்டார்.
நினைவஞ்சலி
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான ஒருவராக நினைவு கூறப்பட்டவர், வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை அவர்கள். அவர், தமிழ்நாட்டில் இன்று வரையிலும், பலரால் மிகவும் நேசிக்கவும், கொண்டாடப்படுபவரும் கூட.
  • ‘கப்பலோட்டிய தமிழன்’ என்றும் ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்றும் ‘கப்பல் செலுத்துகிற திசையைக் காட்டுபவர்’ என்ற பட்டங்களைப் பெற்றார்.
  • சுதந்திரத்திற்கு பின்னர், அவரை நினைவுகூரும் வகையில், தூத்துக்குடி துறைமுகம் ‘வ.உ.சி போர்ட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • அவரது பெயரில் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியும் உள்ளது.
  • செப்டம்பர்  5, 1972, அவரது நூற்றாண்டு விழாவை நினைவுக்ப்ப்ரும் வகையில், இந்திய தபால் மற்றும் தந்தித்தொடர்புத் துறை ஒரு சிறப்பு தபால்தலையை அவரின் பெயரில் வெளியிட்டது.
  • கோயம்புத்தூரிலுள்ள ‘வ.உ.சி பூங்கா’ மற்றும் ‘வ.உ.சி மைதானம்’ மிக முக்கியமான பொது பூங்காவாகவும், சந்திப்புக் கூடமாகவும் இருக்கின்றது.
  • விடுதலைப் போராட்டத்தில், அவரது புரட்சிகரமான செயலுக்காக கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை வளாகத்தில் உள்ளே ஒரு ‘நினைவுச்சின்னம்’ அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் பாலத்திற்கு ‘வ.உ.சி பாலம்’ என பெயரிடப்பட்டது.
  • ‘கப்பலோட்டிய தமிழன் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை’ வாழ்க்கைக் கதையை அடிப்படையாக கொண்டு, 1961ல் தமிழ் படம் வெளியானது. அதன் முன்னணி பாத்திரமாக சிவாஜி கணேசன் அவர்கள் நடித்துள்ளார்.
காலவரிசை
1872: செப்டம்பர் 5 ம் தேதி பிறந்தார்.
1895: வள்ளியம்மையை மணமுடித்தார்.
1901: அவரது மனைவி நோயால் இறந்தார்.
1905: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக அரசியலில் நுழைந்தார்.
1906: நவம்பர் 12ஆம் தேதி அன்று தனது சொந்த கப்பல் நிறுவனமான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத்’ துவக்கினார்.
1908: மார்ச் 12ஆம் தேதி அன்று ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
1908: ஜூலை 9ம் தேதி கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.
1911: அவரது கப்பல் கம்பெனியான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ கலைந்தது.
1912: டிசம்பர் 12 ஆம் தேதி அன்று சிறையில் இருந்து வெளியிடப்பட்டார்.
1920: கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அமர்வில் ஆயத்தமானார்.
1936: நவம்பர் 18ஆம் தேதி அன்று இறந்தார்

Friday, August 19, 2016

பாரதிதாசன்

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஏப்ரல் 291891
பிறப்பிடம்: புதுவை
இறப்பு: ஏப்ரல் 21, 1964
பணி: தமிழாசிரியர்கவிஞர்அரசியல்வாதி
நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
 இல்லற வாழ்க்கை
பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.
பாரதியார் மீது பற்று      
தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
தொழில் வாழ்க்கை
பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
அவரது படைப்புகள்
எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:
‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.
1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது
2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.
இறப்பு
எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
காலவரிசை
1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.
1920: பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.

திருவள்ளுவர்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலக இலக்கிய அரங்கில் அவர் படைத்த சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
வாழ்ந்த காலம்: 2 ஆம் நூறாண்டு முதல் 8 நூற்றாண்டு வரையிலான இடைப்பட்ட காலம்
பிறப்பிடம்: மயிலாப்பூர், தமிழ் நாடு மாநிலம், இந்திய
பணி: புலவர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும், மதுரையில் பிறந்ததாகவும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். மேலும், அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால், இதுவரை இவை எதுவுமே உறுதிப்படவில்லை.
மேலும் சிலர், அவர் ஒரு கிறித்துவர் என்றும், சமண மதத்தவர் என்றும் பவுத்தர் என்றெல்லாம் கூட பொய்யானத் தகவல்களைப் பரிமாறுகின்றனர்.
வள்ளுவரின் திருக்குறள்
திருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர். தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக மாறி, தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நூல், சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்ககின்றனர்.
ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படும் இந்நூல், மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் (இன்பத்துப்பால்) என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
  • அறத்துப்பால் – முதல் பிரிவான ‘அறத்துப்பாலில்’ மனசாட்சி மற்றும் மரியாதை, நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
  • பொருட்பால் – இரண்டாவது பிரிவான ‘பொருட்பாலில்’ உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.
  • இன்பத்துப்பால் – மூன்றாவது பிரிவான ‘இன்பத்துப்பால்’ அல்லது ‘காமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார்.
முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும், இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மற்றும் மூன்றாவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தில் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.
திருக்குறளில் உள்ள அனைத்து கருத்துகளும், உலகில் உள்ள அனைத்து திருக்குறள் சமயங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல், ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்பட்டாலும், இதை இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை.
அவர் இயற்றிய வேறு நூல்கள்
திருக்குறளைத் தவிர, திருவள்ளுவர் மருத்துவம் பற்றிய இரு நூல்களான ‘ஞான வெட்டியான்’ மற்றும் ‘பஞ்ச ரத்னம்’ ஆகிய நூல்களை இயற்றியுள்ளதாகப் பலரும் தெரிவிக்கின்றனர்.
நினைவுச் சின்னங்கள்
இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள முக்கடல் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரியில், அவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதை வடிவமைத்த சிற்பி கணேசன் கூறியுள்ளார். மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.
அவர் நினைவாக, சென்னையில் ‘வள்ளுவர் கோட்டம்’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குரல் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
லண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில் இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவனத்தில், அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், எக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.

ராணி லக்ஷ்மி பாய்

ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த ராணி லட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் வீரச்செயல்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: 19 நவம்பர் 1828
பிறந்த இடம்: வாரணாசி, இந்தியா 
இறப்பு: 18 ஜூன் 1858
தொழில்: ஜான்சியின் ராணி, விடுதலைப் போராட்ட வீரர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு காசியில் (இப்போதைய வாரணாசி) ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தார். அவரது குழந்தை பருவத்தில், அவரை ‘மணிகர்ணிகா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை அன்போடு ‘மனு’ என்று அழைத்தனர்.
ஆரம்ப வாழ்க்கை
தனது நான்காவது வயதிலேயே அவரது தாயை இழந்ததால், குடும்பப் பொறுப்புகளனைத்தும் அவரின் தந்தை மீது விழுந்தது. பள்ளிப்பாடம் படித்து கொண்டிருந்த சமயத்தில், லக்ஷ்மிபை அவர்கள் அவர் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்தி சண்டை போன்ற தற்காப்புக்  கலைகளை முறையாக பயிற்சி மேற்கொண்டு கற்றார்.
இல்லற வாழ்க்கை
1842 ஆம் ஆண்டு, ஜான்சியின் மகாராஜாவாக இருந்த ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார். திருமணத்திற்கு பின், அவருக்கு ‘லட்சுமி பாய்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. அவரது திருமண விழா, பழைய ஜான்சி நகரில் அமைந்துள்ள, விநாயகர் கோவிலில் நடைபெற்றது. 1851ல்,  அவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். துரதிருஷ்டவசமாக,  அந்த குழந்தையால் நான்கு மாதங்களுக்கு மேல் உயிர்வாழ முடியவில்லை.
1853 ல், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார். நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார். அந்த காலகட்டத்தில்,  பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.
படையெடுப்பு
ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி,  லார்ட் தல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார். ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டு செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
போர்
ராணி லக்ஷ்மி பாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேறி சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதில் பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.
1857 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை இருந்து,  ராணி லக்ஷ்மி பாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார். இதுவே, ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம், ஜான்சியை நோக்கி படையெடுத்தற்கான காரணமாகும். ஜான்சிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார்.
இறப்பு
ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர், 1857ல் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற ஒரு மாவீரரான ‘தந்தியா டோப்’ என்பவரை சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் இறந்தார். போர்க்களத்தில் அவர் மயக்கமாக இருந்த போது, ஒரு பிராமணர் அவரை அவரது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கே அவர் மரணமடைந்தார் என்றும் சிலர் கூறுகின்றனர். அவரது மரணத்திற்குப் பின், மூன்று நாட்களில், குவாலியரை ஆங்கிலேய அரசு கைப்பற்றியது.
ராணி லட்சுமிபாய் அவர்களின் வீரமும், மகத்தான முயற்சியும், அவரை ‘இந்திய தேசிய இயக்கத்தின் உருவம்’ என்று குறிப்பிட வைத்தது. தனது வளர்ப்பு மகனான தாமோதரைப் பாதுகாப்பதே ராணி லட்சுமிபாய் அவர்களின் நோக்கமாக இருந்தது. அவரது கதை எதிர்வரும் சுதந்திர போராட்ட வீரத் தலைமுறைகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக ஆனது என்றால் அது மிகையாகாது.
காலவரிசை
1828: ராணி லட்சுமிபாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு காசியில் ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தார்.
1842:  ஜான்சியின் மகாராஜா ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார்.
1851:  அவரது மகன் பிறந்து, பின்பு நான்கு மாதங்களிலேயே காலமானான்.
1853: ஒரு குழந்தையைத் தத்தெடுத்தார்.
1853: நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார்.
1857: ஜான்சி ராணி அவர்கள், அவரது அண்டை நாடுகளைப் படையெடுத்தார்.
1858: ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம் ஜான்சியை நோக்கி படையெடுத்தது.
1858: ஆங்கிலேயர்களின் போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் போர்க்களத்திலேயே இறந்தார்.

கம்பர்

கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என்றெல்லாம் அவரது கவித்திறனைப் பறைசாற்றும் அளவிற்கு அவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியில் சொல்வன்மைக் கொண்டவராக இருந்த அவர், ஆழமான கவிதை அனுபவமும், கற்பனை ஆற்றலும், புலமைத் திறனும் பெற்று, அவரது சமகாலத்துப் புலவர்களான ஓட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றோரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். ‘கம்பராமாயணம்’, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்றவை அவர் படைத்த படைப்புகளாகும். இதில், ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தில் தலைச்சிறந்த காவியமாகக் கருதப்படுகிறது. மேலும், கம்பரின் தனித்துவமான சுவைக்கினிய பாணியில் அதைப் படைத்ததால், அது உலகளாவிய அங்கீகாரம் பெற்றது எனலாம். ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர், அறிஞர், கவிஞர், நாடக ஆசிரியர், என்று பன்முகம் கொண்டு விளங்கிய கம்பர் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: கிபி 1180
பிறப்பிடம்: திருவழுந்தூர், தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: கிபி 1250
பணி: தமிழ்க் கவிஞர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
கம்பர் அவர்கள், கிபி 12 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்னும் இடத்தில் ஆதித்தன் என்பவருக்கு மகனாக ஒச்சன் என்ற உட்பிரிவில் பிறந்தார். அவரது பெற்றோர்கள், கடவுள் நரசிம்மரின் தீவிர பக்தர்கள் என்பதால், அவருக்கு ‘கம்பர்’ என்று பெயர் சூட்டினர். ‘கம்பா’ என்றால் ‘தூண் என்று பொருள். ‘பக்தப் ப்ரகலாதனைக் காக்க, நரசிம்மர், தூணைப் பிளந்து கொண்டு வந்தார்’ என்ற பக்திக் கூற்றைக் கொண்டு, அவருக்கு அப்பெயர் சூட்டினர் அவரது பெற்றோர்.
ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்
நாதஸ்வர வித்வான்களான ஒச்சன் பரம்பரையில் பிறந்திருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் உள்ள வெண்ணைநெல்லூர் என்னும் ஊரில் உள்ள ஒரு பணக்கார விவசாயி ஒருவரால் செல்வ, செழிப்போடு எடுத்து வளர்க்கப்பட்டார். இளம் வயதிலிருந்தே அவர், தொன்மையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழியின் மீது பேரார்வம் உடையவராக இருந்ததால், அவரது நலம் விரும்பியான வள்ளல் சடையப்ப முதலியார் என்பவரின் உதவியுடன் அவ்விருமொழிகளை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். சிறு வயதிலிருந்தே அவருக்குக் கவிதைகள் எழுதும் ஆர்வம் இருந்தது. அம்மொழிகளின் அடிப்படையை பாரம்பரிய முறையில் நன்கு கற்ற அவர், பல கவிதைகளும், நூல்களும் எழுதத் தொடங்கினார். அதன் பின்னர், அவரது கவிப்புலமை எட்டுத்திக்கும் பரவத் தொடங்கியது.
கம்பரின் கவிப்புலமை
மாபெரும் கவிஞராக உருவெடுத்த கம்பரின் புகழை அறிந்த அப்போதைய சோழ மன்னர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அரண்மனைக்கு சென்ற அவர், மன்னரின் அன்பு கட்டளைக்கிணங்க அவரது படைப்புகளில் சில வரிகளை அவருக்குப் பாடிக் காட்டினார். அவரது கவித்திறனை நேரில் கண்டு வியந்த சோழ மன்னர், அவருக்கு, ‘கவிஞர்களின் பேரரசர்’ என்றும் அர்தமுடைய ‘கவி சக்கரவர்த்தி’ என்றும் பட்டம் சூட்டி, அவருக்கு சொந்தமான பெருவாரிய நிலத்தைப் பரிசளித்து, அதற்கு ‘கம்பநாடு’ என்றும் பெயர் சூட்டினார்.
இலக்கிய வாழ்க்கை
கம்பரின் தாய்மொழி, தமிழ் என்றாலும், சமஸ்கிருதத்திலும் அவர் புலமைப் பெற்றே விளங்கினார். அதற்கு சான்று, அவர் எழுதிய ‘கம்பராமாயனம்’. முனிவர் வால்மீகி சமஸ்கிருதத்தில் படைத்த ராமாயணத்தை, அவர் தமிழில், அவருக்குரித்தான பாணியில் மீண்டும் எழுதினார். அவரது பாடல் வரிகளின் அழகு, அற்புதமான நயம், உவமானம் மற்றும் பல வகையான வியக்கத்தகு கவிதை நடைகள் அவரது பாரம்பரிய கவிதைகளில் இடம் பெற்றிருக்கும். தமிழ்மொழியின் பெருமையை, இடைக்கால காலகட்டங்களில் அற்புதமாக வெளிக்காட்டியதால், அவர் ‘கம்ப நாட்டாழ்வார்’ என்றும் அழைக்கப்பட்டார். அவர், கம்பராமாயணம் தவிர, ‘சிலையெழுபது’, ‘சடகோபர் அந்தாதி’, ‘சரசுவதி அந்தாதி’, ‘திருக்கை வழக்கம்’, ‘ஏரெழுபது’ மற்றும் ‘மும்மணிக்கோவை’ போன்ற அற்புதப் படைப்புகளைப் படைத்துள்ளார்.
கம்பராமாயணம்
கம்பராமாயணம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிப்பட்ட இடத்தைப் பிடித்து, தமிழ் இலக்கியத்தையே வானளவிற்கு உயர்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. கவிதை வடிவங்களில் ஆளுமைப் பெற்றவராக இருந்த அவர், வார்த்தைகளில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துபவர் என்பது அக்காவியத்தில் பல இடங்களில் தெளிவாகத் தெரியும். உருவகமும், உவமானமும் நிறைந்த கம்பராமாயணம், பின்னாளில் வரும் கவிஞர்களுக்கு ஒரு குறிப்புதவி நூலாக அமைந்தது. வால்மீகி எழுதிய ராமாயணத்தில் 24, 000 ஈரடிகள் இருக்கும், ஆனால், கம்பராமாயணத்தில் 11, ௦௦௦ சந்தங்கள் இருக்கும். தமிழர்களின் கலாச்சார உணர்திறனுக்கேற்ப அவர், வால்மீகியின் ராமாயணத்தில் பல இடங்களை மாற்றி அமைத்துள்ளார். அவற்றுள் சில:
சீதையைக் கண்ட ஆஞ்சநேயர், அதை ராமனிடம் தெரிவிக்கும் போது, “கண்டனன் கற்பினுக் கணியை கண்களால் ….” என்ற அற்புத வார்த்தைகள் இன்றளவும் தமிழ் இலக்கியத்தில் மறக்கமுடியாத அடிகளாக இருந்து வருகிறது.
இராவணன், சீதையைக் கடத்திக் கொண்டு போகும் போது, “அவள் கற்பிற்கே இலக்கணமாக இருந்தாள் என்பதற்காக, அவள் இருந்த குடிசையோடு சிறிதளவு நிலத்துடன் பெயர்த்தெடுத்து அவளைக் கடத்திக்கொண்டு போனான்” என்றும் அற்புதமாக விளக்கியிருப்பார்.
போரில், ராமன் தொடுத்த ஒரு அம்பு, அவனது உடல் முழுவதும் துளைகளை ஏற்படுத்தியது. இதைக் கம்பர், “ராவணன் சீதை மீது கொண்ட அழிவுநோக்கிய காதல், அவனது உடலில் எங்குள்ளது என்பதை அறியும் சல்லடையாக இருந்தது அந்த அம்பு” என்று யாராலும் யூகிக்க முடியாத அளவிற்கு அற்புதமாக விளக்கியிருப்பார்.
இறப்பு
கவிச்சக்ரவர்த்தி கம்பர், கிபி 1250 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
இதுவரை வந்த தமிழறிஞர்கள் பட்டியலில், கம்பர் யாரும் எட்ட முடியாத இலக்கில் உள்ளார் என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இன்றளவும் தமிழ் அறிஞர்கள் மத்தியில், கம்பனின் கவிதைத் தொகுப்புகள் இணையற்றதாகவே உள்ளது என்று சிறப்பாகவும், பெருமிதத்தோடும் சொல்லலாம்.

வீரபாண்டிய கட்டபொம்மன்

தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’
என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தால், வீறு கொண்டு எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீர வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஜனவரி 3, 1760 
பிறப்பிடம்: பாஞ்சாலங்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: அக்டோபர் 16, 1799
தொழில்: மன்னர், போராட்ட வீரர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
பொம்மு மற்றும் ஆதி கட்டபொம்மன் வம்சாவழியில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமகத்தம்மாள் தம்பதியர். ஜெகவீர கட்டபொம்மன் திக்குவிசய கட்டபொம்மன் என்றும் அழைக்கப்பட்டார். இத்தம்பதியருக்கு மகனாக ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 1760 ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்தார். இவரது இயற்பெயர் ‘வீரபாண்டியன்’ என்பதாகும். கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவழியைக் குறிக்கும் அடைமொழியாகும்.
தனிப்பட்ட வாழ்க்கை
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருக்கு ஊமைத்துரை (குமாரசாமி என்றும் அழைக்கப்பட்டார்), துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னர், கட்டபொம்மன் அவர்கள், வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் அவர்கள், பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்ட்டபோம்மன். பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790 மாம் ஆண்டில், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
ஆங்கிலேயர்களுடன் மோதல்
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் அரியணை பொறுப்பை ஏற்ற அதே சமயத்தில், ஆங்கிலேயர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியது. அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. இதனால், திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்து வராமல், தடைக் கற்களாக இருந்ததால், அவர்களை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களில் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தந்தனர். அவர்களை எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்து, தண்டனையும் வழங்கினர்.
பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவாய் அளித்து வந்த வளமான பகுதிகளான திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்றவை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்ததால், கட்டபொம்மனால் வரி செலுத்த முடியவில்லை. கப்பம் கட்ட போதிய பணம் இல்லாததால், திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி, மக்களிடமிருந்து வரி வசூல் செய்தார், கட்டபொம்மன். இதனைப் பல மக்களும், பகல் கொள்ளை என்று குற்றம் சாட்டி, கட்டபொம்மனை ‘கொள்ளையர்’ என்றெல்லாம் சாடினர். அப்போது, திருநெல்வேலிப் பகுதியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துறை என்பவர் கட்டபொம்மனிடம் வரி கேட்க நேரில் சென்ற போது, கோபமடைந்த கட்டபொம்மன் அவர்கள்,
“நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா?
“வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று பேசிய வீர வசனம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
போர் 
வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரவித்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார். ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாகக் கருதப்பட்ட மைசூர் மன்னரான திப்பு சுல்தான் அவர்களை மே மாதம் 1799 ஆம் ஆண்டில், பீரங்கிகுக்குப் பலி கொடுத்தப் பின்னர், ஆங்கிலேயர்களின் இலக்குக் கட்டபொம்மனாக இருந்தது. அவருக்கும் பிரித்தானிய அரசு நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். இந்தப் போரில், கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கோரினார். ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரைப் புதுக்கோட்டை மன்னன் காட்டி கொடுத்ததால், ஆங்கில நிர்வாகிகள் அவரைக் கைது செய்தனர்.
இறக்கும் தருவாயில் அவர் பேசிய வீர வசனங்கள் 
மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட “குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.
தூக்கு மேடை எயரிய போதும், அவரது பேச்சில் வீரமும், தைரியமும் நிறைந்திருந்தது. இது சுற்றி நின்ற அனைவரின் மனத்திலும் பெருமிதத்தை உருவாக்கியது. தூக்குமேடை ஏறியபோது, “இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினார்.
இறப்பு 
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவின் படி, அக்டோபர் 19ஆம் தேதி, 1799ஆம் ஆண்டில் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீரம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருந்ததால், அவரது வாழ்க்கை வரலாறை, பலரும் நாடகங்களாகவும், திரைப்படமாகவும் எடுத்தனர். பி.ஆர். பந்துலு அவர்கள் 1959 ஆம் ஆண்டில், சிவாஜி கணேசனை வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிக்க வைத்தார். இப்படத்தை சக்தி டி.கே. கிருஷ்ணசுவாமி அவர்கள் எழுதினார். சிவாஜி அவர்களின் தோற்றமும், நடையும், குரலும், கம்பீரமும், வீரபாண்டிய கட்டபொம்மனை அப்படியே பிரதிபலித்திருக்கும். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால், பலருக்கும் சிவாஜி கணேசன் அவர்களே நிவைக்கு வருவார். அந்த அளவிற்கு, அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார். சிவாஜியின் நடிப்பைப் பிறரும் விதமாக, எகிப்து பட விழாவில், அவருக்கு ‘சர்வதேச விருது’ கிடைத்தது.
மரியாதைகளும், நினைவுச்சின்னங்களும்
  • கயத்தாறில் கட்டபொம்மன் அவர்களின் நினைவிடம் உள்ளது.
  • கட்டபொம்மன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பல்வேறு தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கவிதைகளில் இடம்பெற்றுள்ளன.
  • ஆங்கிலேயர்களை இந்திய மண்ணில், ஆரம்ப காலத்திலேயே எதிர்த்த சுதந்திரப் போராளிகளுள் ஒருவராக இன்றளவும் இந்திய அரசாங்கத்தால் கருதப்படுகிறார்.
  • 1974 ல், தமிழக அரசு அவரது நினைவாக ஒரு புதிய நினைவு கோட்டை கட்டியது. மெமோரியல் ஹால் முழுவதும் அவரது வீரச்செயல்களையும், வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வண்ணமாக, சுவர்களில் அழகான ஓவியங்கள் இடம்பெற்றிருக்கும். பிரிட்டிஷ் சிப்பாய்களின் கல்லறை கூட கோட்டை அருகே காணப்படுகின்றன.
  • அவரது அரண்மனைக் கோட்டையின் எச்சங்கள் இன்றளவும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பாதுகாக்கப்படுகின்றன.
  • அவர் தூக்கிலிடப்பட்ட இடமான திருநெல்வேலிக்கு அருகேயுள்ள கயத்தாறில், அதாவது இன்றைய NH7 இல், கட்டபொம்மன் அவர்களுக்கு மற்றுமொரு நினைவுச்சின்னம் இருக்கிறது.
  • அவரது வீரத்தை போற்றும் விதமாகவும், நினைவுக் கூறும் விதமாகவும் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டனில் ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
  • கட்டபொம்மன் அவர்களை கௌரவிக்கும் விதமாக, அவர் தூக்கிலிடப்பட்டு இரு நூறாம் ஆண்டு விழாவின் நினைவாக அக்டோபர் 16, 1799 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஒரு தபால் முத்திரையை வெளியிட்டது.
  • இந்தியாவின் முதன்மையான தொடர்பு நரம்பு மையமாகக் கருதப்படும் விஜயனாரயனத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படைக்கு ‘ஐஎன்எஸ் கட்டபொம்மன்’ என பெயரிடப்பட்டது.
  • 1997 வரை, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த அரசு போக்குவரத்து பேருந்துகள் அனைத்தும் ‘கட்டபொம்மன் போக்குவரத்து கழகம்’ என்ற பெயராலேயே இயங்கிக் கொண்டிருந்தன.
  • வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் (வீரபாண்டிய கட்டபொம்மன் கலாச்சார சங்கம்), என்ற ஒரு அமைப்பு அவரது நினைவாக பெயரிடப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
  • மாவட்ட நிர்வாகம் அவரது ஆண்டுவிழாவை, பாஞ்சாலங்குறிச்சியில் `வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவாக’ கொண்டாடுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த உணர்வு பூர்வமான சுதந்திர போராட்டத்தில் உண்மையான முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருடைய வீரத்தையும், தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. ஆகவே அவருடைய நினைவை போற்றும்
வகையில் பல நினைவுச்சின்னங்களை இந்திய அரசு எழுப்பி வருகிறது.